பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று பயங்கர விபத்தை ஏற்படுத்தியது. சாலையோரம் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் கடைகள் மீது எதிர்பாராத விதமாக மோதியதில், அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்த காய்கறி விற்பனையாளர் காரில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த நான்கு பேர் பலத்த காயமடைந்து உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோர விபத்தின் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நிகழ்ந்த உடனே காரை நிறுத்திவிட்டு தப்பியோட முயன்ற நபர்களில் ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். காரில் பயணித்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்ட நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. கவனக்குறைவாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
