உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சஹர் மாவட்டத்தில் உள்ள சாஹ்ரா பகுதியில் ‘தி சயின்ஸ் ஸ்கூல்’ என்ற பள்ளியைச் சேர்ந்த சிறுவர்கள் ஆபத்தான முறையில் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அளவுக்கு அதிகமான பள்ளிச் சிறுவர்கள் ஒரே வாகனத்தில் அடைத்து வைத்து அழைத்துச் செல்லப்படும் காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அந்த வீடியோவில், பள்ளி வேனில் போதிய இடவசதி இல்லாததால், பல மாணவர்கள் இருக்கை கிடைக்காமல் வாகனத்தில் உள்ள சிஎன்ஜி சிலிண்டரின் மீதும், அதைச் சுற்றிலும் ஆபத்தான முறையில் அமர்ந்து பயணிப்பது தெளிவாகத் தெரிகிறது. கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் சிறுவர்களை இத்தகைய ஆபத்தான சூழலில் ஏற்றிச் செல்வது, திடீர் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் மாணவர்களின் உயிருக்கே பெரும் ஆபத்தாக முடியும் எனப் பெற்றோர்களும் நெட்டிசன்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுத்த புலந்த்சஹர் காவல்துறையினர், அந்த வேனைக் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாவட்டம் முழுவதும் பள்ளி வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்படும் என்றும் உதவி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நீது சர்மா உறுதி அளித்துள்ளார்.
