ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்திலுள்ள டாஹுவா கிராமத்தில், பெற்றோருக்கு அருகில் உறங்கிக் கொண்டிருந்த 12 வயது சிறுமி நள்ளிரவில் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள ஒரு நீரோடையில் அச்சிறுமியின் உடல் தலையற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த லால்மதியா காவல் துறையினர், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இத்தகைய கொடூரச் செயலைச் செய்த குற்றவாளிகளை அடையாளம் காணவும், படுகொலைக்கான உண்மையான பின்னணியைக் கண்டறியவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
