செஞ்சியில் மாயமான சிறுமி…. நள்ளிரவில் கடந்த 14 லாரிகள்…. தூக்கிய சிபிசிஐடி…. 24 நாட்களாக நீடிக்கும் பகீர் மர்மம்…. கடலூரில் கிடைத்த துப்பு….!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா, கடந்த அக்டோபர் 11 அன்று நள்ளிரவில் பிறந்தநாளைக் கொண்டாடிய சில மணி நேரங்களில் திடீரென மாயமானார். உள்ளூர் காவல்துறையினரின் 10 நாள் தேடுதலில் எந்தத் துப்பும் கிடைக்காததால், இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

   

உள்ளூரில் நடத்தப்பட்ட சோதனைகளில் குழந்தையின் துணிமணிகளோ அல்லது செருப்போ கூட கிடைக்காததால், குழந்தை உயிருடன் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதன் அடிப்படையில், சிபிசிஐடி இன்ஃபார்மர்களின் ரகசியத் தகவல்கள் மற்றும் செல்போன் டவர் டம்ப் தரவுகளின் உதவியுடன், புலனாய்வுத் தனிப்படையினர் தற்போது கடலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை நோக்கி அதிரடியாகப் பாய்ந்துள்ளனர்.

   

கடலூர் மாவட்டத்தில் சிறுமி போன்ற உருவ ஒற்றுமை கொண்ட குழந்தை ஒன்று தங்க வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும், சந்தேகத்திற்கிடமான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் காப்பகங்கள் குறித்தும் அதிகாரிகள் மாறுவேடத்தில் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நள்ளிரவு நேரத்தில் அப்பகுதியைக் கடந்து சென்ற லாரிகள் மற்றும் லாரி ஓட்டுநர்களின் பின்னணி குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

 

நாமக்கல் மாவட்டத்தைப் பொறுத்தவரை, இது ஒரு பெரிய லாரி போக்குவரத்து மையம் என்பதால், பச்சிளம் குழந்தைகளைச் சட்டவிரோதமாக விற்கும் புரோக்கர்கள் அல்லது ஏஜென்டுகளின் நடமாட்டம் உள்ளதா என்ற கோணத்தில் சைபர் கிரைம் பிரிவு தகவல்களைத் திரட்டி வருகிறது. குறிப்பாக, ஆலம்பூண்டி பகுதியில் பதிவான 600-க்கும் மேற்பட்ட செல்போன் எண்களில் சில கடலூர் மற்றும் நாமக்கல் எல்லைகளில் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

“எங்கள் குழந்தையைக் கண்டுபிடித்துத் தாருங்கள்” என்று தாய் பவானி கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சிபிசிஐடியின் இந்த எல்லை கடந்த விரிவான விசாரணை இவ்வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. இன்ஃபார்மர்களின் தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், 24 நாட்களாக நீடிக்கும் இந்த மர்மத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு சிறுமி பத்திரமாக மீட்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.