“நான் இங்க ஓட்டு கேட்க வரல…. அரசியல் பேச வரல”…. நான் உங்கள் அண்ணன்…. நீலாங்கரை மேடையில் விஜய் உதிர்த்த அந்த ஒரு வார்த்தை….!

By Nanthini on கார்த்திகை 4, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்வி விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் முதல்கட்டமாக அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இம்மாட்டங்களில் உள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 180 மாணவர்களுக்குச் சான்றிதழ்களையும் ஊக்கத்தொகையையும் விஜய் வழங்கி வாழ்த்தினார்.

விழாவில் மாணவர்களிடையே பேசிய முதல்வர் விஜய், தான் ஒரு முதலமைச்சராகவோ அல்லது அரசியல் தலைவராகவோ இங்கு வரவில்லை என்றும், மாணவர்களின் அண்ணனாகவே வந்துள்ளதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். அரசியல் பேசவோ அல்லது ஓட்டு கேட்கவோ இந்த மேடைக்கு வரவில்லை எனக் கூறிய அவர், மாணவர்கள் இப்போது அரசியல் குறித்து சிந்திக்கத் தேவையில்லை என்றும், முதலில் தங்களுக்குப் பிடித்தமான நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்களின் பெற்றோர் மட்டுமின்றித் தமிழ்நாடே அவர்களின் எதிர்காலத்தை தான் நம்பியிருப்பதாகக் கூறினார்.

   

மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் பேசிய விஜய், ஒவ்வொருவரும் தங்களுக்கென ஒரு தனித்துவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். ஒருவரின் தனித்தன்மையைக் கண்டு பலர் தடை ஏற்படுத்த முயலலாம் என்றும், அவ்வாறு தடுக்க நினைப்பதே அவர்களின் வெற்றிக்கான முதல் அடையாளம் என்றும் குறிப்பிட்டார். தடைகளைத் தாண்டி ஜெயிக்கும் போது பொறாமைப்படுபவர்களைக் கண்டு அஞ்சாமல், உறுதியான நம்பிக்கை (Conviction) மற்றும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் எனத் தாரக மந்திரத்தை வழங்கினார்.

   

இறுதியாக, சமுதாயத்தில் பிறரிடம் பரஸ்பர மரியாதையைப் பேண வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் லஞ்சம், ஊழல் மற்றும் போதைப்பொருட்களின் பக்கம் சென்றுவிடக் கூடாது என அன்பு வேண்டுகோள் விடுத்தார். “உங்களுடன் நான் இருக்கிறேன், என்னுடன் நீங்கள் இருக்கிறீர்கள்; தைரியமாக இருங்கள், நல்லது மட்டுமே நடக்கும்” என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.