ராஜஸ்தான் மாநிலம் டோங்க் பகுதியில் நடைபெறவிருக்கும் சர்பஞ்ச் தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களைக் கவரும் வகையில் இனிப்புப் பெட்டிகளுக்குள் பணத்தை மறைத்து வைத்து வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட ஒரு வேனில் இருந்து அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் அடங்கிய பார்சல்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அந்தப் பெட்டிகளின் மேல்புறத்தில் வேட்பாளரான அங்கித் சோனியின் உருவப்படமும் அவரது பெயரும் அச்சிடப்பட்டிருந்தது.
பொதுமக்களில் சிலர் சந்தேகமடைந்து ஒரு பெட்டியைப் பிரித்துப் பார்த்தபோது, தின்பண்டங்களுக்கு அடியில் தலா 500 ரூபாய் மதிப்புள்ள இரண்டு நோட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்துக்கு வந்தது. வாக்குக்கு லஞ்சம் கொடுக்கும் இந்த உத்தி உடனடியாக அம்பலமானதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதுடன், தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக வேட்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
