தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கட்டுக்கடங்காமல் உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர் சௌரிராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மு.வீரபாண்டியன், பண்டிகைக் காலம் நெருங்கி வரும் சூழலில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, போர்க்கால அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் விலைவாசியைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய உணவுகள் மட்டுமின்றி மருந்து, மாத்திரைகள், பால் பவுடர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களின் விலை உயர்வைக் தடுக்க மத்திய அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய அவர், ஆங்காங்கே நடைபெறும் குற்றச் செயல்கள் மற்றும் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தின் பிடி இறுக வேண்டும் அதேவேளையில், சூழ்நிலை காரணமாக சிறு தவறுகளில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களைப் பரிவுடன் அணுகி, சிறைச்சாலைகளைச் சீர்திருத்தக் கூடங்களாகவும் தொழிற்பயிற்சி மையங்களாகவும் மாற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பொதுமக்கள் விழிப்புணர்வு அரணாக மாற தமிழக அரசு இயக்கங்களை உருவாக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவுக்கே தவிக்கும் நிலை உள்ளபோது, ஆடம்பர விழாக்களுக்குக் கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுவது வேதனையளிப்பதாக மு.வீரபாண்டியன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டப் விவகாரத்தில், மக்களின் உணர்வுகளுக்கும் கோரிக்கைகளுக்கும் தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும் என்றும், மக்கள் வாழும் பகுதிகளில் வலுக்கட்டாயமாகத் திட்டங்களைத் திணிக்கக் கூடாது என்றும் எச்சரித்தார். மக்களின் எதிர்ப்பையும் மீறி அரசாணை பிறப்பிக்கப்பட்டால், இடதுசாரிகள் மக்களுடன் இணைந்து தொடர் போராட்டங்களில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
இறுதியாக, இடைத்தேர்தல் அணுகுமுறை மற்றும் தமிழக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இவை தொடர்பாக கட்சியின் தலைமை அமைப்புகள் கூடி ஆலோசித்து உரிய முடிவுகளை எடுக்கும் என்றார். அரசியல் சூழலுக்கு ஏற்ப கட்சியின் அமைப்புகள் எடுக்கும் முடிவே இறுதியானது என்றும், அதன்படியே கட்சி செயல்படும் என்றும் கூறி அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
