ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுபோதையில் வீட்டிற்குள் புகுந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற 25 வயது இளைஞரை, பெண்களின் உறவினர்கள் பிடித்துக் கட்டி வைத்துத் தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை 500 பிளாக் பகுதியில் உள்ள வீட்டிற்குள் சையது அலி பாத்திமா (40), அனீஸ் பாத்திமா (42) ஆகிய இரு பெண்கள் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் ஆஷிக் ரகுமான் (25) என்ற இளைஞர் அதிக மதுபோதையில் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். பெண்கள் இருவரும் அவரைத் தடுத்துத் தாக்கியும் அவர் வெளியேறாததால் கத்திக் கூச்சலிட்டுள்ளனர்.
பெண்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், ஆஷிக்கைப் பிடித்துக் கட்டி வைத்துச் சரமாரியாகத் தாக்கியதுடன் கீழக்கரை காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார் தலை மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் கிடந்த ஆஷிக்கை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி ஆஷிக் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகச் சினி ஹமீது, காஜா மொய்னுதீன், அமீர் அப்துல்லா, முகமது ஆதில் ஆகிய 4 பேரைக் கீழக்கரை போலிஸார் பிடித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
