பெங்களூரு இந்திரா நகர் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஷூ மற்றும் பேக் பழுதுபார்க்கும் கடையில் 23 வயதான ஜெயஸ்ரீ என்ற பெண் பணியாற்றுகிறார். அக்டோபர் 31ஆம் தேதி காலை கடையில் அவர் தனியாக இருந்தபோது, ஹெல்மெட் மற்றும் கையுறைகள் அணிந்தபடி வந்த 40 வயதான பிரபுராஜ் என்ற நபர், யாரோ தன்னைக் கொல்ல வருவதாகப் பொய் கூறி உள்ளே நுழைந்துள்ளார். அடுத்த நொடியே வரவேற்பு மேசையைக் தாண்டி உள்ளே குதித்த அந்த நபர் கத்தியைக் காட்டி ஜெயஸ்ரீயை மிரட்டியுள்ளார்.
பெண் தப்பிக்க முயன்றதால், அவரது கைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் வகையில் ஃபெவிகுவிக் பசையை ஊற்றி, வாயில் துணியைத் திணித்துக் கழுத்தில் கத்தியை வைத்துச் “சத்தம் போட்டால் கொன்றுவிடுவேன்” எனக் கொடூரமாக மிரட்டியுள்ளார். தொடர்ந்து அவரிடமிருந்த ரூ.4.5 லட்சம் மதிப்புள்ள 35 கிராம் தங்கச் சங்கிலியைப் பறித்தார்.
இருப்பினும் பெண் கஷ்டப்பட்டு அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டதால், அந்த நபர் பெண்ணின் தலைமுடியைப் பிடித்துக் கத்தி முனையில் பிணைக்கைதியாக வைத்துத் தப்ப முயன்றார். ஆனால், அங்கிருந்த பொதுமக்களும் போக்குவரத்துக் காவல்துறையினரும் துணிச்சலாகச் செயல்பட்டு கொள்ளையனைச் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்து இந்திரா நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
