பூனேவில் உள்ள முகுந்த் நகரைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மருமகளும், முன்னாள் தகவல் தொழில்நுட்ப பெண் ஊழியருமான பாயல் ஜாம்பரே பாட்டீல் (29), திங்கள்கிழமை காலை தனது வீட்டின் அருகே உள்ள மற்றொரு பிளாட்டின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மரணத்திற்கு அத்தைதான் காரணம் எனக் குறிப்பிட்டு சிலருக்குச் செய்தி அனுப்பிய நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இவருக்கு அக்சய் ஜாம்பரே பாட்டீல் என்ற கணவரும், மூன்று வயதில் பெண் குழந்தையும் உள்ளனர்.
பாயலின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், கூடுதல் வரதட்சணையாக 10 தோலா தங்கம் கேட்டு துன்புறுத்தியது மற்றும் 2023-இல் பெண் குழந்தை பிறந்ததற்காக மனரீதியாகச் சித்திரவதை செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாயலின் அத்தை, கணவர் உட்பட நான்கு பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரது கணவர் அக்சய் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பாயலின் குடும்பத்தினர் அவரது மாமனாரின் வீடு மற்றும் வணிக வளாகங்களை அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தினர்.
தனது மகள் படுகொலை செய்யப்பட்டுத் தற்கொலையாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகப் பாயலின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்கொலைக்குத் தூண்டியதாகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சடலம் கண்டெடுக்கப்பட்ட பிளாட்டின் கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததாகவும், பின்புற பால்கனி வழியாகவே உள்ளே சென்று உடலைக் கண்டெடுத்ததாகவும் பாயலின் சகோதரர் தெரிவித்துள்ளார். தலைமறைவாக உள்ள எஞ்சிய குற்றவாளிகளைப் பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
