தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா, பிரபல அரசியல் பிரமுகர் வீட்டுத் திருமண விழாவில் மேடையேறிப் பாட்டு பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகளுக்குச் சென்னை நீலாங்கரையில் அண்மையில் திருமணம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி, கவிஞர் வைரமுத்து, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மேடையில் பாடல் பாடி மணமக்களை வாழ்த்தினார்.
திரையரங்குகளிலும் பெரிய இசை கச்சேரிகளிலும் தனது இசையால் பல லட்சம் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் யுவன் சங்கர் ராஜா, திருமண மேடையில் பாடியதைப் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள், “நமது இசைக்கடவுளுக்கு என்னாச்சு, கல்யாண மேடையில் பாடும் நிலைக்கு வந்துவிட்டாரே” என வருத்தத்துடன் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். அதேவேளையில், “மணமக்களின் அன்பான வேண்டுகோளுக்காக யுவன் பாடியிருக்கலாம், இதில் தவறு ஒன்றும் இல்லையே” என மறுதரப்பு ரசிகர்கள் அவருக்கு ஆதரவாகப் பேசி வருவதால் இச்செய்தி இணையத்தில் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
