மகாராஷ்டிர மாநிலம் லாட்டூரில் உள்ள தனியார் குரியர் அலுவலகத்திற்கு வெளியே பார்சல்களை இறக்கிக் கொண்டிருந்தபோது, திடீரெனப் பார்சல் ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் ஊழியர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மகாராஷ்டிராவின் லாட்டூர் பகுதியில் அமைந்துள்ள உத்யோக் பவன் அருகே உள்ள பரபரப்பான வணிக வளாகப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது. தனியார் குரியர் நிறுவனத்திற்கு வந்த கூட்ஸ் வாகனத்திலிருந்து ஊழியர் ஒருவர் பார்சல் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பார்சல் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால் ஊழியர் படுகாமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுப் பார்சல் போக்குவரத்து அதிகரித்திருக்கும் வேளையில் இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து விரைந்து வந்த சிவாஜிநகர் காவல் நிலையக் காவல்துறையினர் அப்பகுதியை மூடி முத்திரையிட்டதுடன், பட்டாசுப் பொருட்கள், எரியக்கூடிய இரசாயனங்கள் அல்லது பேட்டரி சம்பந்தப்பட்ட பொருட்கள் காரணமாக இந்த வெடிப்பு நிகழ்ந்ததா என்பது குறித்துத் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
