அதிமுகவின் முன்னணி மூத்த நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மீது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சி வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டதற்கு, இவ்விரு தலைவர்களும் பின்னணியில் இருந்து செய்த உள்ளடி வேலைகளே காரணம் என எடப்பாடி பழனிசாமிக்கு ரகசிய அறிக்கைகள் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், கட்சியின் பின்னடைவைச் சாதகமாகப் பயன்படுத்தி, அதிமுகவின் தலைமையை மீண்டும் கைப்பற்றுவதற்கான மறைமுக நடவடிக்கைகளில் இவர்கள் மீண்டும் தீவிரமாக ஈடுபடத் தொடங்கியுள்ளதாகவும் கட்சித் தலைமைக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக அவர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், தற்போதைய சூழலில் அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினால், தங்க ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ஒருங்கிணைத்து விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) அழைத்துச் சென்றுவிடுவார்கள் என மூத்த நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். இந்த உட்கட்சிப் பூசல் மற்றும் கட்சி உடைவு ஆபத்தைக் கருத்தில் கொண்டு, இப்போதைக்கு அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
