நள்ளிரவில் கதவு திறந்த சத்தம் கேட்கலையா?…. பாட்டியிடம் சிபிசிஐடி போட்ட ‘திடீர்’ ஸ்கெட்ச்…. செஞ்சி சிறுமி வழக்கில் தாய் அளித்த பகீர் வாக்குமூலம்….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு – பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமாகி இரண்டு வாரங்களுக்கும் மேலாகிவிட்டது. அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை அதிகாலையில் மர்மமான முறையில் காணாமல் போனார். உள்ளூர் போலீசாரைத் தொடர்ந்து களமிறங்கிய சிபிசிஐடி அதிகாரிகள், கடந்த சில நாட்களாக தீவிர தேடுதல் மற்றும் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இதுவரை அதிகம் பேசப்படாத சிறுமியின் பாட்டியிடம் சிபிசிஐடி தனது பார்வையைத் திருப்பியுள்ளது வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி மாயமான அன்று நள்ளிரவு, சிறுமியுடன் ஒரே அறையில்தான் தாயும் பாட்டியும் படுத்து உறங்கியுள்ளனர். பொதுவாக வயதான பாட்டிகளுக்கு லேசான சத்தம் கேட்டாலும் விழிப்பு வந்துவிடும் இயல்பு உண்டு. அப்படி இருக்கும்போது, அதிகாலையில் குழந்தை படுக்கையை விட்டு எப்படி நகர்ந்தார், வெளியே யாராவது தூக்கிச் சென்றார்களா அல்லது கதவு திறந்த சத்தம் கூட கேட்காத அளவுக்கு என்ன நடந்தது போன்ற கேள்விகளுக்கு விடை காணவே பாட்டியை சிபிசிஐடி அதிகாரிகள் தனியாக அழைத்து துருவித் துருவி விசாரித்து வருகின்றனர். குடும்பத்திற்குள் நடந்த உள் விவகாரங்கள், கொடுக்கல் வாங்கல் அல்லது ஏதேனும் குடும்பப் பூசல்கள் குறித்து விசாரித்தால் உண்மை வெளிவரலாம் என்ற அடிப்படையில் இந்த விசாரணை தீவிரமடைந்துள்ளது.

   

தற்போது சிபிசிஐடி தனிப்படையின் விசாரணை தாய், பாட்டி மற்றும் பழைய குற்றவாளி ராஜதுரை என 3 முக்கிய முனைகளை மையமாக வைத்து முழு வேகத்தில் நகர்கிறது. 6 ஆண்டுகளாக இல்லாத திடீர் பிறந்தநாள் கொண்டாட்டம், சாமியார் தொடர்பு, நள்ளிரவில் வாசற்கதவு திறந்திருந்தது போன்ற முரண்பாடுகளை மையமாக வைத்து தாய் பவானியிடம் விசாரணை தொடர்கிறது. அதேவேளையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிய பாட்டியிடம் தனி வாக்குமூலம் பெறப்பட்டு, தாயின் பதில்களோடு ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. மற்றொருபுறம், பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராஜதுரையைச் சிறையில் இருந்து கொண்டுவந்து, உள்ளூர் குற்றவாளிகள் அல்லது வெளியாட்களின் பிண்ணனி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

   

ஒருபுறம் குடும்பத்திற்குள்ளேயே ஏதேனும் ரகசியங்கள் மறைக்கப்பட்டுள்ளதா என்ற பார்வையில் தாயும் பாட்டியும் விசாரிக்கப்படுகின்றனர். மறுபுறம் வெளிப்புற ஆட்களின் அத்துமீறலா என்ற கோணத்தில் குற்றவாளி ராஜதுரை விசாரிக்கப்படுகிறார். இப்படி குடும்பத்தினர் மற்றும் வெளிப்புற நபர் என இருவேறு முனைகளிலும் ஒரே நேரத்தில் பிடியை இறுக்கியுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், சிறுமி ஹேமலதா எங்கு இருக்கிறார் என்ற மர்ம முடிச்சை மிக விரைவில் அவிழ்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.