சென்னையை மிரட்டிய ‘ஒர்னாப்’ புயல்…. சுனாமி ஞாபகத்தை வரவழைத்த கோரத் தாண்டவம்…. வைரல் காட்சிகள்….!

By Nanthini on ஐப்பசி 28, 2026

Spread the love

வங்கக்கடலில் உருவான ‘ஒர்னாப்’ அதி தீவிரப் புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. கணிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே நேற்று இரவு தொடங்கிய இந்தச் செயல்முறையின் காரணமாக, ஆந்திராவின் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே மணிக்கு 180 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலின் தாக்கத்தால் ஆந்திரக் கடற்கரையோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

ஆந்திராவில் நிலவும் அதீத சீற்றத்தின் எதிரொலி, தமிழகத் தலைநகர் சென்னையிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை, எண்ணூர் மற்றும் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரையிலான ஈசிஆர் கடலோரப் பகுதிகளில் கடல் வழக்கத்திற்கு மாறாகக் கொந்தளிப்புடன் காணப்பட்டது. சுனாமிக்குப் பிறகு சென்னையில் இத்தகைய கோரத் தாண்டவத்தைக் கடல் பார்ப்பது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.

   

கடல் அலைகளின் ஆக்ரோஷம் அதிகமாக இருந்ததால், பாறைகளைத் தாண்டி சாலைகளிலும் தண்ணீர் பாய்ந்தோடியது. இதனால் அந்த வழியாகச் சென்ற பைக்குகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்கள் அலையில் தூக்கி வீசப்பட்டன. சில வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் போக்குவரத்து உடனடியாகத் தடை செய்யப்பட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

   

விபரீதத்தை உணராமல் செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுக்கக் கூடியிருந்த பொதுமக்களைப் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து விரட்டினர். “கையெடுத்து கும்புட்டு கேட்டுக்குறோம், இயற்கையோட விளையாடாதீங்க, உடனடியாக வீட்டுக்குப் போங்கள்” என வேண்டுகோள் விடுத்து அனைவரையும் அப்புறப்படுத்தினர். புயலின் வால் பகுதி இன்று முழுமையாகக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.