மும்பையில் சிக்னல் கோளாறு மற்றும் தீ விபத்து காரணமாக உள்ளூர் ரயில் சேவைகள் பல மணி நேரம் ஸ்தம்பித்ததால், தண்டவாளத்தில் இறங்கி நடந்த 22 வயது பி.காம் கல்லூரி மாணவர் சாஹில் திதே ஏசி ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தானேயில் உள்ள கணினிப் பயிற்சி வகுப்பை முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக பண்டூப் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் சாஹில் காத்திருந்தபோது, ரயில் வரும் நடைமேடை மாற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியானது. தாமதமாக வந்துகொண்டிருந்த ரயிலைப் பிடிக்க அவசர அவசரமாகத் தண்டவாளத்தைக் கடந்து செல்ல முயன்றபோது, அதிவேகமாக வந்த ஏசி லோக்கல் ரயில் சாஹில் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
முன்னதாகக் கஞ்சூர்மார்க் பகுதியில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு மற்றும் மின்சாரக் கம்பிப் பழுதினால் ரயில்கள் பல மணி நேரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால், பொறுமையிழந்த பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி நடக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தில் சாஹில் திதே தவிர மேலும் இருவர் ரயில் மோதி உயிரிழந்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியமே தன் மகனின் மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள சாஹிலின் குடும்பத்தினர், அரசு நிவாரணமும் குடும்பத்திற்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
