ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 25 வயதான ராஜேஷ் என்பவர், நாச்சாரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் வசித்துக்கொண்டு அங்குள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், மாதாபூர் பகுதியில் வசிக்கும் தனது நண்பர்களை நேரில் சந்திப்பதற்காக அவர் சென்றுள்ளார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள துர்கம் செருவு கேபிள் பாலத்திற்கு சென்ற ராஜேஷ், திடீரென ஏரிக்குள் குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர், ஏரியில் தீவிரமாக இறங்கி அவரது உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
