சட்டம் அனைவருக்கும் சமமா?… 2 மணி நேரத்தில் பெயிலா?… மகன் செய்த விபத்து… சிக்கிய மாவட்ட நீதிபதி… முற்றுகையிட்ட உறவினர்கள்…!!

By Gayathri on ஐப்பசி 27, 2026

Spread the love

கேரள மாநிலம் கொச்சி அருகே சேரநல்லூர் பகுதியில் அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற பாலகிருஷ்ணன் என்பவர் சொகுசு கார் மோதி உயிரிழந்தார். விசாரணையில், கூடுதல் மாவட்ட நீதிபதியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் காரை, அவருடைய 17 வயது மகன் ஓட்டி வந்தபோது இந்த கோர விபத்து நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது.

விபத்தை ஏற்படுத்திய சிறுவன் உடனடியாகக் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஆனால், அவருக்கு முந்தைய குற்றப் பின்னணி ஏதுமில்லை என்பதைக் காரணம் காட்டி, ஆஜர்படுத்தப்பட்ட இரண்டு மணி நேரத்திலேயே நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இவ்வளவு விரைவாக ஜாமீன் வழங்கப்பட்டதால் கடும் அதிர்ச்சியடைந்த உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதைத் தொடர்ந்து போலீசார் அச்சிறுவனை மீண்டும் காவலில் எடுத்து விசாரணையைத் தொடர்ந்தனர்.

   

இதனிடையே, உரிய வயதை எட்டாத மகனிடம் வாகனத்தை ஒப்படைத்த குற்றத்திற்காக, காரின் உரிமையாளரான கூடுதல் மாவட்ட நீதிபதி மீது மோட்டார் வாகனச் சட்டப் பிரிவு 199A-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக நீதிபதி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கேரள உயர் நீதிமன்றத்திடம் காவல்துறை அனுமதி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.