தமிழகமே அதிர்ச்சி…. “காலையில் மாயம்… அடுத்த நாள் பிணமாக மீட்பு”…. 7 வயது சிறுவன் முத்துவேலன் மரணத்தில் புதிய திருப்பம்..!

By Nanthini on ஐப்பசி 27, 2026

Spread the love

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன். வெளிநாட்டில் பணிபுரியும் இவரது மனைவி சத்யா, தனது பிள்ளைகளுடன் தனியாமங்கலத்தில் வசித்து வருகிறார். இவர்களது 7 வயது மகனான முத்துவேலன், வெள்ளலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தான். கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி விடுமுறை நாளில், வீட்டின் அருகே விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினரும் கிராம மக்களும் பல இடங்களில் தேடியும் சிறுவன் கிடைக்காததால், மேலூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

புகாரின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அடுத்த நாள் 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபடத் தயாரான நிலையில், அதே பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டிற்குள் சிறுவன் முத்துவேலன் மர்மமான முறையில் சடலமாகப் பிணமாகக் கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆழமான சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

   

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுரை மாவட்டக் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் வேணுகோபால் மற்றும் மேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் பாழடைந்த வீட்டிற்குள் சென்றது எப்படி, அவரது மரணத்தில் ஏதேனும் சதி திட்டம் உள்ளதா என்பது குறித்து பல கோணங்களில் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

   

இதனிடையே, சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கும் உறவினர்கள், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் எனக் கூறி, கீழையூர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்துள்ளனர். உடற்கூராய்வு அறிக்கை வெளியான பிறகே சிறுவனின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.