கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவர் அகிலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் ஆசிரியர் விஜயகுமார் என்பவர் சாதி ரீதியாக இழிவுபடுத்தும் வகையில் கேள்வி எழுப்பியதாகவும், அதனைத் தொடர்ந்து சக மாணவர்களால் தாக்கப்பட்ட அகிலன் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்டதாகவும் பெற்றோரும் முன்னாள் மாணவர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பாகத் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஆசிரியர்கள் விஜயகுமார் மற்றும் அருண்குமார் ஆகியோரைக் கைது செய்யாமல் மகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று பெற்றோரும் உறவினர்களும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டாலும், அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும், காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காலதாமதம் செய்வதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், தனது மகனுக்கு நேர்ந்த சோகம் இனி யாருக்கும் நேரக்கூடாது என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
