கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கல்லூரி மாணவிக்கு லிப்ட் கொடுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குலசேகரம் பகுதியைச் சேர்ந்த எம்.ஏ. மாணவியும், அவரது தோழியும் கடந்த புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து கொட்டுமலை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகியான கிறிஸ்டோபர் தனது காரில் அவர்களை ஏற்றியுள்ளார்.
முதலில் மற்றொரு மாணவியை அவரது வீட்டில் இறக்கிவிட்ட கிறிஸ்டோபர், குலசேகரத்தைச் சேர்ந்த மாணவியை மட்டும் வீட்டின் அருகில் கொண்டு சென்று விடுவதாகக் கூறி தனி வழியில் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென காரை நிறுத்திய அவர், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்று தனது பெற்றோரிடம் நடந்துகூறி அழுதுள்ளார்.
பெற்றோரின் புகாரின் அடிப்படையில் கொற்றிக்கோடு காவல் நிலையத்தால் பெறப்பட்ட இப்புகார், பின்னர் தக்கலை காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, பி.என்.எஸ். (BNS) சட்டம் 75 மற்றும் 76 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்ததாகவும், இதற்கிடையே தலைமறைவாகியுள்ள கிறிஸ்டோபரைத் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் மீது இது போன்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில், கன்னியாகுமரியில் தற்போது கல்லூரி மாணவிக்கு எதிராக அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.
