ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் பகுதியில் உள்ள ஹவுசிங் காலனியில் குடும்பப் பிரச்சனை காரணமாக ஒரு கோரச் சம்பவம் நடந்துள்ளது. சுஷ்மா தேவி (40) என்ற பெண்ணின் மீது, மோக்ஷ் வர்மா என்ற நபர் டீசலை ஊற்றி தீ வைத்துள்ளார். இந்தத் தாக்குதலில் சுஷ்மா தேவியின் உடலில் சுமார் 70 சதவீதம் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடலில் தீப்பற்றியதால் அலறித் துடித்த சுஷ்மா தேவி உதவி கேட்டு ஓடியுள்ளார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து, அவரை மீட்டு உடனடியாக உதம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுஷ்மா தேவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இத்தாக்குதலுக்கான உண்மையான காரணம் மற்றும் குற்றவாளி குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
