உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், 37 வயது நபர் ஒருவர் ஓடும் காரின் முன்பக்கக் கண்ணாடிகளில் கைகள் மாட்டிக்கொண்ட நிலையில், சுமார் 1.5 கிலோமீட்டர் தூரம் ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காரில் கைகள் சிக்கிய அந்த நபரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற கும்பல், அவரை நடுரோட்டில் தூக்கி வீசிவிட்டு அதே காரை அவர் மீது ஏற்றித் தப்பியுள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் உள்ள பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் புகாரின் அடிப்படையில் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்துள்ள கான்பூர் மாநகரக் காவல்துறையினர், தொடர்புடைய வாகனத்தையும் இருவரையும் விசாரணைக்காகக் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
