குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த விஸ்வராஜ்சிங் மயூர்சிங் கோஹில் என்பவர் அங்குள்ள தபால் அலுவலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி சில மாதங்களிலேயே மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது மனைவி குடும்ப வன்முறை தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 9-ம் தேதி அவர் நீதிமன்றத்தில் ஆஜராகியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சூழலில், அக்டோபர் 12-ம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஹரிச்சந்திரகாட் மலைப்பகுதியின் கொங்கண்கடா பகுதியில் சுமார் 1,700 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விஸ்வராஜ்சிங் உயிரிழந்தார். சம்பவ இடத்தின் அருகே அவரது இருசக்கர வாகனமும் செல்போனும் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். பள்ளத்தாக்கின் ஆழம் மற்றும் கடினமான நிலப்பரப்பு காரணமாக, ட்ரோன் கேமராக்கள் மற்றும் மலை ஏறும் பயிற்சி பெற்ற வீரர்களின் உதவியுடன் சுமார் 24 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.
உயிரிழப்பதற்கு முன்பு விஸ்வராஜ்சிங் சுமார் 13 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்றைப் பதிவு செய்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதில், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள், தன் மீதும் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்பட்டதாக அவர் கூறிய குற்றச்சாட்டுகள் மற்றும் சட்ட நடைமுறைகள் குறித்த தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், இத்தகைய வழக்குகளில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது வீடியோவில் இடம்பெற்ற குற்றச்சாட்டுகள் இன்னும் சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த மரணம் தொடர்பாகத் தற்செயல் மரண அறிக்கையைப் பதிவு செய்துள்ள போலீஸார், வீடியோ மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
