மாயமான சிறுமி எங்கே?… 1 மாதம் கடந்தும் கிடைக்காத துப்பு… கடத்தல் கும்பல் கைவரிசையா?… வெடிக்கும் புதிய சந்தேகங்கள்…!!

By Gayathri on ஐப்பசி 22, 2026

Spread the love

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியில் வசித்து வரும் சேகர் – பிரேமா தம்பதியினருக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களைச் சேகரித்து வாழ்க்கை நடத்தி வரும் இத்தம்பதியினர், தங்கள் குழந்தையுடன் சாலையோரத்தில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி மாணிக்கம் நகர் பகுதியில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை திடீரென மாயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து குழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். குழந்தை காணாமல் போய் ஒரு மாதத்தைக் கடந்தும், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குழந்தை காணாமல் போன இடத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் முக்கிய தடயங்கள் கிடைக்காததும் போலீசாருக்குச் சவாலாக அமைந்துள்ளதாகத் தெரிகிறது.

   

இதற்கிடையில், குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குழந்தையைப் பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மாதமாகியும் குழந்தை குறித்த உறுதியான தகவல் கிடைக்காததால், பெற்றோர் மிகுந்த வேதனையில் உள்ளனர். குழந்தை எங்கு இருக்கிறது, என்ன நடந்தது என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நீடிக்கிறது.