விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி பகுதியில், வடிவேலு – பவானி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டாவது மகளான ஹேமாவதி, தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடிய பின்னர், இரவு பெற்றோருடன் வீட்டில் தூங்கியுள்ளார். மறுநாள் அதிகாலை சுமார் 5 மணியளவில் பெற்றோர் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால், காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இதையடுத்து, சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காகத் தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டது. கிராமத்தின் வீடுகள், விவசாய நிலங்கள், கரும்புத் தோட்டங்கள், மலைப்பகுதிகள், கிணறுகள் மற்றும் நீர்நிலைகளில் தேடுதல் நடத்தப்பட்டது. மேலும், மோப்ப நாய்கள், ட்ரோன் கேமராக்கள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலமாகவும் விசாரணை நடைபெற்றது. இருப்பினும், பத்து நாட்களாகியும் சிறுமி குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை.
இந்தச் சூழலில், வழக்கின் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில், சிறுமி மாயமான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைக்குப் பின்னர், தற்போது சிபிசிஐடி அதிகாரிகள் இந்த வழக்கைத் தொடர்ந்து விசாரிக்க உள்ளனர். சிறுமி எங்கு சென்றார், அவருக்கு என்ன நடந்தது என்பது குறித்த மர்மம் இன்னும் விலகாத நிலையில், குழந்தையை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதி மக்களிடையே அதிகரித்துள்ளது.
