கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திருவனந்தபுரம் மாவட்டம் பரசாலா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த வழியாக வந்த பிலாஸ்பூர் – திருநெல்வேலி விரைவு ரயிலின் எஞ்சின் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. ரயிலை உரிய நேரத்தில் சாதுரியமாக நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு பயணிகள் அனைவரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக மீட்பு மற்றும் சீரமைப்பு உபகரணங்களுடன் ஊழியர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ரயிலை பாதுகாப்பாக நகர்த்த மாற்று எஞ்சின் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், தண்டவாளத்தில் உள்ள மணல் மற்றும் பாறைகளை அகற்றி பாதையை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டன.
இந்த விபத்தின் விளைவாக அப்பகுதியில் ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, நாகர்கோவில் – திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மார்க்கத்தில் இயக்கப்படும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் பல விரைவு ரயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டும், புறப்படும் நேரம் மாற்றப்பட்டும் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சீரமைப்பு பணிகள் நிறைவடையும் வரை அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகளில் தாமதம் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
