மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சமீபத்திய ஆய்வறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அதிகளவிலான தரமற்ற மருந்துகள் மற்றும் மாத்திரைகள் தமிழகம், கர்நாடகா மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடத்தும் தொடர் பரிசோதனைகளின் மூலம், பொதுமக்களின் உடல்நலனைப் பாதுகாக்கும் பொருட்டு இத்தகைய தரமற்ற தயாரிப்புகள் குறித்த விவரங்கள் கண்டறியப்பட்டு மாதந்தோறும் வெளியிடப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் மொத்தம் 220 மருந்துகள் தரமற்றவையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள் போன்ற முக்கிய மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, கண்டறியப்பட்ட தரமற்ற மருந்துகளில் சுமார் 45 சதவீதம் அதாவது 100 மருந்துகள் மேற்கண்ட மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 38 மருந்துகளும், கர்நாடகாவில் 24 மருந்துகளும் கண்டறியப்பட்டுள்ளன.
