அட கடவுளே… ஒரு போஸ்ட்டுக்கு தூக்கு தண்டனையா?… ஈரானில் 23 வயது மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… இணையத்தில் நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

By Swetha on ஐப்பசி 16, 2026

Spread the love

ஈரானில் சர்வாதிகாரத்திற்கும் அரசு நிர்வாகத்தின் தோல்விகளுக்கும் எதிராக வெடித்த மக்கள் போராட்டங்களின் பின்னணியில், கருத்து சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக எழுந்த புரட்சியில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும், 50,000-க்கும் மேற்பட்டோர் சிறையிலடைக்கப்பட்டும் உள்ள சூழலில், போராட்டத்தில் முதன்முதலில் கைது செய்யப்பட்ட 23 வயது கல்லூரி மாணவி நஜ்மே அமினிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது மனிதநேயமுள்ள அனைவரையும் வேதனையடைய செய்துள்ளது.

சமூக ஊடகப் பதிவு ஒன்றில் முகமது நபியை அவமதித்ததாக ‘சப் உல்-நபி’ குற்றச்சாட்டின் கீழும், தேசிய பாதுகாப்புக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறி 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடனும் அவருக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நண்பர்களுடன் இருந்தபோது போதை காளான்களை உட்கொண்டதால் வாய் தவறிப் பேசியதாகக் கூறி மாணவி தரப்பில் மன்னிப்பு கோரப்பட்ட போதிலும், நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துவிட்டது. வெளிப்படைக்குச் சமூக ஊடகப் பதிவு காரணமாகக் காட்டப்பட்டாலும், அவர் தொடர்ந்து அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்து வந்ததே இந்த கடுமையான தண்டனைக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

   

மக்களை அச்சுறுத்தி எதிர்ப்புக் குரல்களை முற்றிலுமாக மவுனிக்கச் செய்ய ஈரானிய அதிகாரிகள் மரண தண்டனையை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். நடப்பு ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ‘ஈரான் மனித உரிமைகள் அமைப்பு’ எச்சரித்துள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு மரண தண்டனை வழங்கும் இந்த ஈவு இரக்கமற்ற சட்டத்தை எதிர்த்து சர்வதேச சமூகம் உடனடியாகக் குரல் கொடுக்காவிட்டால் மேலும் பல உயிர்கள் பறிபோகும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தங்களது கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.