சென்னை பள்ளிக்கரணையில் குடும்பத் தகராறு காரணமாக கணவர் ஒருவர் தனது மனைவியை மற்றொருவருடன் கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த மகேந்திரன், தன் குடும்பத்தைக் காப்பாற்ற அனுப்பிய கடின உழைப்புப் பணம் மற்றும் சொத்துக்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி ஊடகங்கள் மற்றும் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்துள்ளார்.
மகேந்திரனுக்கும் சித்திரை செல்விக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் பள்ளிக்கரணையில் வசித்து வந்துள்ளனர். சித்திரை செல்வி அரசியல் கட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ள நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வார்டு செயலாளர் முகேசுடன் பழக்கம் ஏற்பட்டு அது திருமணத்தைத் தாண்டிய உறவாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மகேந்திரன், கடந்த 2025-ஆம் ஆண்டிலேயே பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தும், போதிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என வேதனைத் தெரிவித்தார்.
இன்று காலை சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய மகேந்திரன், நேராக தனது வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டிற்குள்ளிருந்த மனைவியும் முகேசும் இவரைக் கண்டதும் அதிர்ச்சியடைந்து, உடனடியாக வீட்டின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர், வீட்டின் வெளிப்பக்கக் கதவைச் பூட்டிவிட்டு காவல் துறையின் அவசர உதவி எண் 100-க்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், இருவரையும் மீட்டு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால், ஆளுங்கட்சியினர் மற்றும் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என்பதால் போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், தனது புகார்களின் மீது இதுவரையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் கணவர் பகிரங்கமாகத் குற்றம் சாட்டியுள்ளார்.
சிங்கப்பூரில் மாதம் மூன்று லட்சம் ரூபாய் வரை சம்பாதித்து அனுப்பியதன் மூலம், தன் மனைவியின் பெயரில் விடுதிகள், அழகு நிலையங்கள் மற்றும் நிலங்களை வாங்கித் தந்துள்ளதாக மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் கஷ்டப்பட்டு சேர்த்த 250 பவுன் நகைகள் மற்றும் சொத்துக்களை ஏமாற்றிவிட்டதாகவும், தற்பொழுது தனக்குக் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீருடன் தெரிவித்தார்.
மனைதியுடன் விவாகரத்து பெறுவதில் தனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை என்று தெரிவித்துள்ள மகேந்திரன், தான் இழந்த தனது உழைப்பின் பலனான சொத்துக்களையும் நகைகளையும் சட்டப்பூர்வமாக மீட்டுத் தர வேண்டும் என்பதே தனது பிரதான கோரிக்கையாக முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகவும், தனக்கு உரிய நீதி கிடைக்க ஊடகங்கள் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
