சென்னை அண்ணா நகர் கிழக்கில் உள்ள வீட்டில் பணியாற்றி வந்த குழந்தை பராமரிப்புப் பெண், அங்குள்ள கழிப்பறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மூலம் ரகசியமாகப் படம்பிடிக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. துளையிடப்பட்ட பெட்டிக்குள் செல்போன் இயங்கிக்கொண்டிருந்ததை அக்டோபர் 12 அன்று தற்செயலாகக் கவனித்த அப்பெண், உடனடியாக அதை வீட்டு உரிமையாளர் லலித்குமாரிடம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அவர் அளித்த புகாரின் பேரில் அண்ணா நகர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே வீட்டில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சுகுமார் தாண்டி மற்றும் அசோக் குமார் யாதவ் ஆகிய இருவரே இந்த அத்துமீறலில் ஈடுபட்டது உறுதியானது. அவர்கள் அப்பெண்ணை ரகசியமாகப் படம் பிடித்ததோடு மட்டுமல்லாமல், அவரது பெயரில் போலி சமூக வலைதளக் கணக்கையும் தொடங்கி இயக்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து செல்போன்களைப் பறிமுதல் செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களைச் சிறையில் அடைத்தனர்.
