ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த சுந்தராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டெம்போ ஓட்டுநர் கோகுல்ராஜ் (34), அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவரது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது கணவர் தேவராஜிடம் தெரிவித்ததை அடுத்து, தேவராஜ் நேரில் சென்று கோகுல்ராஜை எச்சரித்துள்ளார். இருப்பினும் அவர் தனது செயலைத் தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், தனது நண்பர்களான நந்தகுமார் (19), பிரசாந்த் (23) மற்றும் தரனேஷ் (23) ஆகியோருடன் சேர்ந்து கோகுல்ராஜை வழிமறித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த கோகுல்ராஜை அப்பகுதி மக்கள் மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காகச் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கோகுல்ராஜின் தந்தை சிவராஜ் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தேவராஜ் உள்ளிட்ட 4 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட நால்வரையும் பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
