திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை சமத்துவபுரம் பகுதியில், 80 வயது மூதாட்டியிடம் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியில் வசித்து வரும் சின்னப்பொண்ணு என்ற 80 வயது மூதாட்டி, சம்பவத்தன்று வீட்டின் அருகே நடந்து சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுவன் அவரைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சேர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளான்.
வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், சிறுவன் யாரும் இல்லாததை சாதகமாகப் பயன்படுத்தி அத்துமீற முயன்றதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் வாயில் துணியை வைத்துப் பலவந்தப்படுத்தியபோது, அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிட்டுள்ளார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாகச் சிறுவனைப் பிடித்தனர்.
இதற்கிடையில், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டதால், அந்தச் சிறுவன் அங்கிருந்து தப்பியோடியுள்ளான். புகாரின் அடிப்படையில் விரைந்து செயல்பட்ட ஆர்.கே.பேட்டை போலீசார், தனிப்படை அமைத்துத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு, சுமார் ஐந்து மணி நேரத்திற்குள் தலைமறைவான சிறுவனைப் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, சிறுவன் கைது செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். பகீர் கிளப்பும் இச்சம்பவம் சமத்துவபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும், பாதுகாப்புக் குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
