மகாராஷ்டிராவில் 23 வயதான இறுதியாண்டு பொறியியல் மாணவி தர்ரன்னும் நாயக் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஸ்ரீபாத் வாடர் என்பவரும் கடந்த ஐந்தரை ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தர்ரன்னுமிற்கு வேறு ஒருவருடன் நவம்பர் 12-ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 9 அன்று நைக்வாடி நீர்வீழ்ச்சிப் பகுதிக்குச் சென்றபோது, காதலியை 1,000 அடி ஆழமான பள்ளத்தாக்கில் தள்ளி ஸ்ரீபாத் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சம்பவத்திற்குப் பிறகு காவல் நிலையத்திற்குச் சென்ற ஸ்ரீபாத், இருவரும் சேர்ந்து தற்கொலை செய்ய முயன்றதாகவும், தான் பயந்து பின்வாங்கிவிட்டதாகவும் நாடகமாடித் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் அவர்களது செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்ததில் அவரது பொய் அம்பலமானது. இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், 1,000 அடி ஆழத்திலிருந்து மாணவியின் உடலை மீட்டதுடன், காதலன் ஸ்ரீபாத் வாடரை அதிரடியாகக் கைது செய்து 5 நாள் போலீஸ் காவலில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
