உத்தரப் பிரதேச மாநிலம் சந்தோலி மாவட்டம் ஜக்தீஷ்ராய் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பிரகாஷ் சிங்கின் மகள் நேஹா (20). இவர், அதே பகுதியைச் சேர்ந்த கால்நடை வளர்ப்புத்துறை ஊழியரான சவான் (24) என்பவரைக் காதலித்து, குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறிப் பதிவுத் திருமணம் செய்துகொண்டார். காதலனுடன் சோன்பத்ரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் நேஹா, குடும்பத்தினர் எவ்வளவோ முயன்றும் தன் கணவருடன் வாழ்வதிலேயே உறுதியாக இருந்தார்.
தன் விருப்பத்திற்கு மாறாக வேறு சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தந்தை பிரகாஷ் சிங், அதிர்ச்சியூட்டும் விபரீத முடிவு ஒன்றை எடுத்தார். தன் பேச்சை மீறிச் சென்ற மகள் தன் குடும்பத்திற்கு இறந்துவிட்டதாகக் கருதிய அவர், உயிருடன் இருக்கும் நேஹாவுக்கு முறைப்படி இறுதிச்சடங்குகளைச் செய்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதுகுறித்து பேசிய தந்தை பிரகாஷ் சிங், “குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பெற்றோர் எ எவ்வளவோ தியாகங்களைச் செய்கிறார்கள். ஆனால், பிள்ளைகள் தங்கள் வாழ்வின் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பெற்றோரை மதித்து அவர்களின் சம்மதத்தைப் பெற வேண்டும். எங்கள் விருப்பத்திற்கு மாறாக அவள் திருமணம் செய்து கொண்டது என்னை மிகவும் காயப்படுத்தியதால்தான் இந்த முடிவை எடுத்தேன்” என்றார். அவரது தம்பியும் இந்தச் செயலை ஆதரித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் எதிர்பார்ப்புகளையும் சமூகத்தின் சாதி நடைமுறைகளையும் மீறி இளம் தலைமுறையினர் தங்களது வாழ்க்கைத்துணையைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்திற்கும், பாரம்பரிய குடும்பங்களின் பிடிவாதமான கவுரவ உணர்வுகளுக்கும் இடையிலான முரண்பாட்டை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
