திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிபாளையம் திருக்குமரன் நகர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டுத் தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கணவரே கொலை செய்த கோரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்டோபர் மற்றும் பவிலா தம்பதியினர், திருப்பூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டு கட்டிடத் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
பவிலாவின் நடத்தையில் கணவர் கிறிஸ்டோபருக்குச் சந்தேகமிருந்ததால், தினமும் வேலை முடிந்து வரும் மனைவியிடம் “யார் கூட போய்ட்டு வர” என்று கேட்டுத் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவிலும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டு அக்கம் பக்கத்தினர் அவர்களைச் சமாதானம் செய்து வைத்துள்ளனர். பின்னர் அனைவரும் தூங்கச் சென்றபோது ஆத்திரம் அடங்காத கிறிஸ்டோபர், ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பவிலாவின் தலையில் அம்மிக்கல்லை எடுத்துப் போட்டுள்ளார். இதில் பவிலா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வீரபாண்டி காவல்துறையினர் உடலைக் கைப்பற்றித் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், கொலை செய்த கிறிஸ்டோபரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
