சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். பூந்தமல்லி – வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவை, தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் துறைமுக உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் இதில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசின் முழுமையான ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்றைய நாள் மிகவும் முக்கியமானதாக வர்ணித்த பிரதமர், குஜராத் முதல்வராக இருந்த காலம் தொடங்கி தற்போதைய முதலமைச்சர் விஜய் வரை மாநிலத்தின் பல்வேறு தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், “முதலமைச்சர் விஜயுடன் இணைந்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் நகர்ப்புற வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கடந்த 12 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் சேவை கணிசமாக விரிவாக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மின்னணு மற்றும் செல்போன் உற்பத்தித் துறையில் இந்தியா உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உயர்ந்துள்ளதாக பிரதமர் பெருமிதம் தெரிவித்தார். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதோடு, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார். குறிப்பாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் பசுமை எரிசக்தி மையமாக மாற்றப்பட்டு வருவதுடன், சென்னை மீன்பிடித் துறைமுகம் நவீனமயமாக்கப்படுவதற்கும் மத்திய அரசு முழு உதவி வழங்கும் என்று உறுதியளித்தார்.
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது என்ற கொள்கையுடன் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார். புதிய சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுக திட்டங்கள் தமிழ்நாட்டின் தொழிற்துறையை மேலும் வலுப்படுத்தும் எனவும், வர்த்தகப் பொருட்கள் மிக வேகமாக உலகச் சந்தையைச் சென்றடைய இவை பேருதவியாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். நவராத்திரி திருநாளில் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் தமிழ்நாட்டிற்கு முக்கிய இடமுண்டு என்பதை திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
