சமீபகாலமாக 30 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களையும் உயர் இரத்த அழுத்தம் அதிகமாகப் பாதித்து வருகிறது. இந்நோய்க்குக் கட்டுப்பாடற்ற உணவு முறை, மன அழுத்தம் மற்றும் உட்கார்ந்தபடியே பணியாற்றும் வாழ்க்கை முறை முக்கியக் காரணங்களாக இருந்தாலும், பெற்றோருக்கு பிபி இருந்தால் அது குழந்தைகளுக்கும் வருமா என்ற கேள்வி பலரிடையே உள்ளது. இது குறித்து டெல்லி மெடாண்டா மெடிசிட்டி மருத்துவமனையின் மூத்த இருதயவியல் நிபுணர் டாக்டர் தருண் குமார் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, பெற்றோருக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தால் மரபணுக்கள் வழியாகக் குழந்தைகளுக்கு அது கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். ஒருவர் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும், மரபணு ரீதியாகப் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இயல்பான இரத்த அழுத்தம் 120/80 mm Hg ஆக இருக்க வேண்டும் என்றும், 140/90 mm Hg-க்கு மேல் சென்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. குடும்பத்தில் யாருக்கேனும் பிபி இருந்தால், உணவில் உப்பைக் குறைத்தல், தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளுதல் மற்றும் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் இதன் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
