உத்தரப்பிரதேச மாநிலம் எடவா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுத் தொடக்கப் பள்ளியில், மாணவரின் மொட்டைத் தலையில் தபலா வாசிப்பது போல் தட்டி விளையாடிய ஆசிரியர் தினேஷ் குமார் மாத்தூர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்திருந்த அந்த ஆசிரியர், கீழே அமர்ந்திருந்த மாணவனின் மொட்டைத் தலையை தபலா போல தட்டி சிரித்துள்ளார். இதனை அவரே வீடியோவாகப் பதிவு செய்து, தனது முகநூல் பக்கத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவலாகப் பரவியதை அடுத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அடிப்படை கல்வித்துறை இந்த விவகாரத்தைக் கவனத்தில் கொண்டது. ஒழுங்கீனமாக நடந்துகொண்டதற்காக ஆசிரியர் தினேஷ் குமார் மாத்தூரை உடனடியாகப் பணிநீக்கம் செய்து அடிப்படை கல்வி அலுவலர் டாக்டர் ராஜேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து கல்வித்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
