டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றது முதல், வெளிநாட்டினரின் வேலைவாய்ப்பு மற்றும் குடியுரிமை தொடர்பான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறார். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கும் நோக்கில், ஹெச்-1பி (H-1B) விசா கட்டண உயர்வு மற்றும் உயர் கல்விக்குப் பின் தங்குவதற்கான கட்டணங்களை உயர்த்தியதுடன், தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளார்.
மைக்ரோசாப்ட், அடோபி, காக்னிசண்ட், இன்போசிஸ், டிசிஎஸ் (TCS), விப்ரோ (Wipro), ஹெச்சிஎல் (HCL) மற்றும் கேப்ஜெமினி ஆகிய 8 முக்கிய ஐடி நிறுவனங்களை ‘PERM’ தொழிலாளர் சான்றிதழ் திட்டத்திலிருந்து அமெரிக்க அரசு இடைநீக்கம் செய்துள்ளது. விசா திட்டங்களைத் தவறாகப் பயன்படுத்தி, அமெரிக்க ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவிட்டு வெளிநாட்டினருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த இடைநீக்க நடவடிக்கையின் காரணமாக, மேற்கண்ட நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்கள் அங்கேயே நிரந்தரமாக வசிப்பதற்கான ‘கிரீன் கார்டு’ (Green Card) பெறுவதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டுள்ளது. PERM திட்டம் என்பது வெளிநாடுகளிலிருந்து தேவையான திறமையாளர்களை நிரந்தரமாகப் பணியமர்த்த முதலாளிகளுக்கு உதவும் ஒரு முக்கிய அங்கீகாரம் என்பதால், இந்தத் தடை நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவைத் தந்துள்ளது.
டிரம்பின் இந்த தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இந்தியாவில் செயல்படும் முன்னணி ஐடி நிறுவனங்களுக்கும், அங்கு பணிபுரியும் இந்தியத் தொழில்முறை நிபுணர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவில் நீண்டகாலம் தங்கிப் பணிபுரியத் திட்டமிட்டிருந்த பல இந்தியர்களின் கனவுகளுக்கு இந்த முடிவு தற்காலிகத் தடையை ஏற்படுத்தியுள்ளதோடு, எதிர்காலப் பணிக்கான சவால்களையும் அதிகரித்துள்ளது.
