ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பந்திபோரா மாவட்டத்தில் திடீரெனப் பெய்த பலத்த சூறைக்காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை, அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தத் தீவிர இயற்கை சீற்றத்தால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் மற்றும் பழத்தோட்டங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
இந்த திடீர் ஆலங்கட்டி மழையால் தங்களுக்குப் பெருமளவில் விவசாய இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி விவசாயிகள் கவலையிலும் கண்ணீரிலும் ஆழ்ந்துள்ளனர். “எல்லாமே முடிந்துவிட்டது” என அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் குவிந்து கிடக்கும் பனி மற்றும் ஆலங்கட்டிகளின் வீடியோக்களைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, வட மற்றும் மத்திய காஷ்மீரைத் தொடர்ந்து தெற்கு காஷ்மீர் பகுதிகளுக்கும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
