உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள பிருந்தாவன் பகுதியில் செயல்பட்டு வரும் ‘மகரிஷி குருகுல சம்ஸ்கிருத வித்யாலயா’ பள்ளியைச் சேர்ந்த 5 மாணவர்கள், சைதன்ய விஹார் பகுதிக்கு அருகே உள்ள 12 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதைச் சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளனர்.
அப்போது தொட்டிக்குள் தேங்கியிருந்த நச்சு வாயுவைச் சுவாசித்ததில் 4 மாணவர்கள் மயங்கி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஆபத்தான நிலையிலிருந்த ஒரு மாணவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
