தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துகளைப் புறந்தள்ளித் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டது. இதன் அடிப்படையில், அவர் ஆளும் பாஜக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், அவரைப் பணியிடை நீக்கம் செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.
தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு இம்மனுவை விசாரித்தபோது, வெறும் ஊடகச் செய்திகளின் அடிப்படையில் மட்டும் தலைமைத் தேர்தல் ஆணையரை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனத் தெளிவுபடுத்தியது. அதேவேளையில், அரசியலமைப்பின்படி பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை, தலைமைத் தேர்தல் ஆணையர் தனி ஒருவராகப் பயன்படுத்த முடியுமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், செய்தித்தாள் அறிக்கையின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யாமல் உத்தரவிட முடியாது என்று கூறினர். எனினும், சட்ட நடைமுறைகள் பின்பற்றப்படாமலோ அல்லது பெரும்பான்மை ஒப்புதல் இல்லாமலோ முடிவுகள் எடுக்கப்பட்டது கண்டறியப்பட்டால், ஆணையத்தின் அந்த நடவடிக்கைகளை ரத்து செய்யவோ அல்லது தடை விதிக்கவோ தயங்கமாட்டோம் என்றும் எச்சரித்தனர்.
இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், வரைவுத் திட்டங்களின் போது தேர்தல் ஆணையர்கள் எழுப்பும் கேள்விகளும் ஆலோசனைகளும் வழக்கமான நிர்வாக நடைமுறையே தவிர, அவை இறுதி முடிவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அல்ல என்று விளக்கியுள்ளது. மேலும், சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் தொடர்பான அனைத்து முடிவுகளும் அனைத்து ஆணையர்களின் ஒருமனதான ஒப்புதலுடனேயே எடுக்கப்பட்டதாகவும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
