உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ அலிகஞ்ச் பகுதி புராணியா மேம்பாலத்தின் கீழ் சனிக்கிழமை மாலை லூடோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது நண்பர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. விளையாட்டின் போது ஏற்பட்ட வாய் தகராறில் ஆத்திரமடைந்த பிரதீப் சிங் என்ற நபர், அருகில் இருந்த கத்தரிக்கோலை எடுத்துப் பிக்கப் வாகன ஓட்டுநரான ராகுல் (எ) அபிஷேக் அவஸ்தியின் (32) மார்பு மற்றும் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராகுலை விட்டுவிட்டுத் தாக்குதல் நடத்திய நபர் தப்பியோடினார். போலிஸாரின் தாமதத்தால் உறவினர்களே ஆட்டோவில் அவரை கே.ஜி.எம்.யூ மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தப்பியோடிய முதன்மை குற்றவாளி பிரதீப் சிங்கை அலிகஞ்ச் போலிஸார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
