“என்னை மதிக்காமல்.. மாவட்ட செயலாளரை பார்க்க போனியா?”…. வீட்டிற்குள் புகுந்து செருப்பால் தாக்குதல்…. தவெக பெண் நிர்வாகிக்கு நேர்ந்த கொடூரம்….!

By Nanthini on ஐப்பசி 5, 2026

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் தனலட்சுமி (37). தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதல் தீவிரமாக பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து தவெக-வில் இணைந்த பெண் ஒருவருக்கு வரவிருக்கும் பேரூராட்சி மன்றத் தேர்தலில் வார்டு கவுன்சிலர் வாய்ப்பு வழங்குமாறு, மாவட்டச் செயலாளர் மகேஸ்வரனிடம் பரிந்துரைத்துள்ளார். ஆனால், தன்னிடம் ஆலோசிக்காமல் மாவட்டச் செயலாளரை நேரில் சென்று சந்தித்ததால் ஆத்திரமடைந்த விளாத்திகுளம் பேரூராட்சி தவெக நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி, கடந்த வெள்ளிக்கிழமை (அக். 02) தனலட்சுமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொலைபேசி தகராறைத் தொடர்ந்து, முத்துராமலிங்க சேதுபதியும் அவரது மனைவி சௌந்தர்யாவும் நேரடியாகத் தனலட்சுமியின் வீட்டிற்கே சென்று மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தனலட்சுமியை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரது முகத்தில் செருப்பை வீசியும், விளக்கமாற்றால் தாக்கியும் மிகக் கொடூரமாகத் தள்ளியுள்ளனர். தனலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது கணவரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாக தலையிட்டு அவரை மீட்டுள்ளனர். பொதுவெளியில் தமக்கு ஏற்பட்ட இந்த அவமானத்திற்கும் தாக்குதலுக்கும் நீதிகோரி தனலட்சுமி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

   

ஆனால், புகார் மனுவைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் சனிக்கிழமை இரவு வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தனலட்சுமியை அலைய வைத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சனிக்கிழமை இரவில் விளாத்திகுளம் காவல் துறையினர் தவெக நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி மீது பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள முத்துராமலிங்க சேதுபதியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

கடந்த சில நாட்களுக்கு முன்புதான் எட்டையாபுரம் தவெக நகரச் செயலாளர் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் ஆகிய இருவரும் அரிவாளுடன் சென்று ஒரு இளம் பெண்ணின் குடும்பத்தினரை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளேயே, விளாத்திகுளத்தில் கட்சியின் நகரச் செயலாளரே சக பெண் நிர்வாகியின் வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.