கர்நாடக மாநிலம் பீடார் மாவட்டக் காவல் துறையினர் ஹைதராபாத்தில் நடத்திய ரகசிய வேட்டையில், சட்டவிரோதக் கள்ளத்துப்பாக்கி விற்பனை நெட்வொர்க்கின் முக்கியப் புள்ளியான பல்பீர் சிங் என்பவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் பீடார் ரிங் ரோட்டில் கள்ளத்துப்பாக்கிகளை விற்க முயன்ற இருவரைக் கைது செய்த போலிஸார், அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் வாள்களைப் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களைத் தொடர்புகொண்டு, ஒரு கள்ளத்துப்பாக்கியை ரூ.80,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதன் பின்னணியில் செயல்பட்டுத் தப்பியோடிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த முக்கியக் குற்றவாளி பல்பீர் சிங்கை ஹைதராபாத்தில் வைத்து பீடார் போலிஸார் மடக்கிப் பிடித்தனர். இதுவரை இந்த வழக்கில் ரூ.4 லட்சம் மதிப்பிலான 5 கள்ளத்துப்பாக்கிகள் மற்றும் 12 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. “சுய பாதுகாப்புக்குத் துப்பாக்கி தேவைப்பட்டால் சட்டப்பூர்வமாக விண்ணப்பிக்க வேண்டும்; சட்டவிரோதமாகப் பிஸ்டல் வாங்கினால் கடும் நடவடிக்கை பாயும்” எனப் பீடார் எஸ்பி பிரதீப் எச்சரித்துள்ளார்.
