சென்னை பெருங்குடியில் உள்ள முக்கியப் பகுதியான எம்ஜிஆர் சாலையில் இன்று மாலை திடீரென தார்ச்சாலை உள்வாங்கி பள்ளம் உருவானது. அந்தப் பள்ளத்திலிருந்து எதிர்பாராத விதமாக நீரூற்று போல தண்ணீர் அதிக அளவில் வெளியேறியதால், விபத்தில் சிக்கிவிடுவோமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை பாதியிலேயே நிறுத்தினர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்று அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினரும், சென்னை குடிநீர் மற்றும் வடிகால் வாரிய அதிகாரிகளும் உடனடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். பாதாளத்தில் செல்லும் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாகவே இப்படி தண்ணீர் பீய்ச்சியடித்திருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்தப் பள்ளத்தைச் சுற்றி இரும்புத் தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் போக்குவரத்தை சீர்செய்தனர்.
