தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஆளுங்கட்சியின் துரோகத்தையும் ஜனநாயக விரோதச் செயல்களையும் கடுமையாகச் சாடினார். “அமராவதி ஆற்றின் அழகும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட தாராபுரம், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கே விதை நெல்லை சப்ளை செய்யும் பெருமைமிக்க ஊர்” என்று புகழாரத்துடன் உரையைத் தொடங்கிய அவர், “உழைப்பையும் உண்மையையும் மதிக்கும் உங்களிடம் நான் வெறும் வாக்கு கேட்க மட்டும் வரவில்லை; ஜனநாயகத்தைக் காக்க நியாயம் கேட்க வந்துள்ளேன். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இறப்பினால் இங்கு தேர்தல் வரவில்லை; நீங்கள் அளித்த வாக்கை ஆட்டம் காணும் ஆட்சிக்கு விற்று, ஜனநாயகத்தைச் சாகடித்த துரோகத்தினாலேயே இந்த இடைத்தேர்தல் உங்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களால் ‘பெட்டி பாமா’ என்றும் ‘பல்டி பாமா’ என்றும் அழைக்கப்படும் அந்த வேட்பாளர், ஐந்து மாதங்களுக்கு முன்பு மக்கள் அளித்த தீர்ப்பைக் கொச்சைப்படுத்திவிட்டு வேறு கட்சிக்கு ஓடிப்போய்விட்டதாக விமர்சித்தார். “பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களைக் கூட வெல்ல முடியாத, மக்கள் ஆதரவே இல்லாத ஒரு நபர்தான் இன்று முதல்வராக இருக்கிறார். தன் சுயலாபத்திற்காக மக்கள் தீர்ப்பை விலைக்கு வாங்கி, இந்தத் தேர்தலைத் திணித்துள்ளார். தேர்தல் களத்தில் உள்ள அமைச்சர்கள் அரசாங்க வேலையைப் பார்க்காமல் தொகுதியிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆளும் கட்சியின் போலி பிம்பத்தையும், மக்களின் வாக்குரிமையைக் கொச்சைப்படுத்தும் இவர்களையும் தாராபுரம் மக்கள் மரண அடி கொடுத்து விரட்டியடிக்க வேண்டும்; இல்லையெனில் தமிழ்நாடு முழுவதும் இதே குதிரை பேர வேலையில் இறங்கிவிடுவார்கள்” என்று எச்சரித்தார்.
மேலும், தவெக மற்றும் பாஜக இடையிலான ரகசிய உறவைக் காரசாரமாக விமர்சித்த ஸ்டாலின், “பிரச்சார மேடைகளில் மனப்பாடம் செய்த வசனங்களைக் கத்தும் ‘ரீல்ஸ் சிஎம்’, ஊடகங்களைக் கண்டு பயந்து ஓடுகிறார். மேட்டூரில் கண்ணாடி வாங்கியவர் முதல் காலை உணவு பரிமாறிய சிறுமி வரை பேட்டி கொடுக்கும் போது, நாட்டின் முக்கியப் பிரச்சினைகள் குறித்துப் பேச முதல்வர் பயப்படுகிறார். தலைமைத் தேர்தல் ஆணைய விவகாரத்திலும், இந்தியா முழுவதும் பேசப்படும் பிரச்சினைகளிலும் வாய் திறக்காத இவருக்கு பாஜக என்றால் பயமா? தாராபுரத்திற்குப் பிரச்சாரத்திற்கு வந்தபோதே தவெக என்பது பாஜகவின் கிளைதான் என்பதை அவரே ஒப்புக்கொண்டுவிட்டார். சட்டமன்றத்தின் மாண்பைக் குலைத்து, நான் மிசா காலத்தில் பட்ட கொடுமைகளைக் கிண்டல் செய்யும் களமாக அதை மாற்றிவிட்டனர். இவர் சீப் மினிஸ்டராக நடந்து கொள்ள வேண்டுமே தவிர, ‘சீப்’ மினிஸ்டராக அல்ல” என்று சாடினார்.
இறுதியாக, “தவெக என்பது அரசியல் கட்சியே அல்ல; தமிழ்நாட்டைச் சூறையாடத் துடிக்கும் ஒரு ‘கார்ப்பரேட் மாபியா'” எனச் சாடிய ஸ்டாலின், இந்தத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். “தப்பித்தவறி ஆளும் கட்சி இங்கு வெற்றி பெற்றால், உடனடியாக மின் கட்டணமும் பால் விலையும் கடுமையாக உயரும். இங்கு நீங்கள் கொடுக்கும் அடியில்தான் அவர்கள் எம்.எல்.ஏ.க்கள் ஷாப்பிங்கை நிறுத்திவிட்டு தமிழ்நாட்டின் மீது கவனம் செலுத்துவார்கள். அன்று மாவீரன் தீரன் சின்னமலையை வீழ்த்தியது துரோகம்தான்; இன்று தாராபுரத்தின் மீதும் அதே துரோகமே தேர்தலாகத் திணிக்கப்பட்டுள்ளது. அந்த ஆணவத்திற்கும் அக்கிரமத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து விசுவாசமானவரை வெற்றி பெறச் செய்யுங்கள்” எனத் தொண்டர்களின் கரவொலிக்கு இடையே தனது உரையை நிறைவு செய்தார்.
