தமிழக அரசியலில் திமுகவை வீழ்த்துவது என்பது சாதாரண நிகழ்வு கிடையாது என்றும், திமுகவை பார்த்துப் பயப்படுவதால்தான் தொடர்ந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் ‘தமிழ் நிறம்’ யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தாராபுரத்தில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து விமர்சித்த அவர், தவெக என்பது பாஜகவின் கிளையாகவே ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மை தாராபுரம் கூட்டத்திலேயே வெளிப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், “முதலமைச்சர் ஸ்டாலின் நடிக்கிறார் என்று விஜய் கூறுகிறார்; ஒருவேளை ஸ்டாலினுக்கு மட்டும் உண்மையாகவே நடிக்கத் தெரிந்திருந்தால், தவெகவை அன்றைக்கே காலி செய்துவிட்டுப் போயிருப்பார்” என்றும் எள்ளலாகக் குறிப்பிட்டார்.
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்து ஆட்சியை நேர்த்தியானது என்று விஜய் கூறுவது அவரது அறியாமையைக் காட்டுவதாகவும், கலைஞர் ஆட்சிக் காலத்து சாதனைகளை கூகுளில் தேடிப் பார்த்தாலே உண்மை புரியும் என்றும் அய்யநாதன் சுட்டிக்காட்டினார். அத்துடன், ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி போன்றவர்களுடன் சேர்ந்து தனியார் மயமாக்கலை ஊக்கப்படுத்தும் வகையில் தவெக செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
