பெரம்பலூர் மாவட்டம் நெடுவாசல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவர், சிறுகச் சிறுகச் சேமித்த பணத்தில் தனது சொந்த ஊரில் புதிதாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அவர் ஊர் திரும்பியுள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காலை தங்களுக்குச் சொந்தமான வயலில் மாடு மேய்ப்பதற்காகச் சென்ற வெற்றிவேல், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்த நிலையில், கவுல்பாளையம் பகுதியில் உள்ள மூடப்பட்ட கல்குவாரி அருகே அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடப்பது தெரியவந்தது. அவரது தலையில் பெரிய கல்லைப் போட்டு மர்ம நபர்கள் கொன்றிருந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த மருவத்தூர் போலீசாரும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் வெற்றிவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வெளிநாட்டில் இருந்து வந்த சில நாட்களிலேயே நடந்த இந்த கொலைக்கான காரணம் குறித்து தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். அவருக்கு முன்விரோதம் ஏதும் இல்லாததால், நண்பர்களிடையே மது போதையில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் சந்தேகிக்கின்றனர். அப்பகுதியில் நடைபெறும் கள்ளச்சந்தை மது விற்பனையே இதுபோன்ற குற்றச் செயல்களுக்கு முக்கியக் காரணம் என்றும், காவல் துறையினர் அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
